my thoughts.....

constellation, assimilation, formation and expression of my cerebration!

Wednesday, August 6, 2008

சாரு நிவேதிதாவின் தசாவதாரம் பற்றிய விமர்சனத்திற்கு என் பதில்.

தசாவதாரம் படத்தை பற்றி சாரு நிவேதிதா என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய விமர்சனம் ஒன்றை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்து இருந்தார். அதை படித்த பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு பிரளயத்தின் விளைவே இந்த பகுதி. இந்த பகுதியை படிக்கும் முன் சாரு நிவேதிதாவின் விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - http://charuonline.com/july08/dasavatharam.html

நேர்மையற்ற முறையிலும், அரைவேக்காட்டுத் தனமாகவும், சூழ்ச்சித் திறனுடனும் கையாளப்பட்ட ஒரு கபடதாரியின் எழுத்து இது. தோலைச் சாப்பிட நினைத்தால் துவர்க்கவும், அதனை உரிக்க நினைத்தால் கண்ணிற்கு எரிச்சல் ஏற்படுத்தவும், தோலை உரித்தபின் எதோ சுளை சுளையாக பார்ப்பதற்கு ஒவ்வாமலும் இருக்கும் ஆரஞ்சு பழம் எங்கே; அழகான சிவப்பு நிறத்துடனும், தோலுடனே சாப்பிடகூடியதாகவும் உள்ள ஆப்பிள் எங்கே? - என வினவுவது போன்றுள்ளது சாரு நிவேதிதாவின் தசாவதாரம் படத்தை பற்றிய விமரிசனம்!

தனக்கு தெரிந்த சில விசயங்களையும், தன் சூழ்ச்சித் திறனையும் முதலீடாக கொண்டு, தனி நபர் மீது கொண்ட விரோதப்போக்கை தீர்த்துக்கொள்ளவும், தன்னுடைய எழுத்தை படிக்கும் வாசகனின் புலன்களை சுரண்டவும் பயன்படுத்திக்கொண்ட தன்னலப் போக்கை தவிர இது ஒரு விமரிசனமே அல்ல! கொடுத்த கற்களை வைத்துக்கொண்டு கோபுரமும் எழுப்பலாம், கல்லறையும் கட்டலாம். எழுத்துக் கற்களை வைத்துக் கொண்டு ஒரு படைப்பாளியின் மீதான வெறுப்பின் பால் அவனது படைப்பிற்கு கட்டப்பட்ட விமரிசன கல்லறை இது. எழுத்தாளனின் எழுத்து சிவனிடம் வாங்கிய வரத்தை போன்றது. அதை தவறாகவோ, சுய நலத்திற்காகவோ பயன்படுத்துவது வரம் தந்த சிவனின் தலையிலேயே கைவைப்பது போன்றதாகும்.

கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஏதோ சில வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கடன் பத்திரம் காலாவதியானதை போல் பேசுவது வேடிக்கையாகத்தான் உள்ளது! கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்க்கு பின்னால் ஆண் மற்றும் பெண்ணின் உடல் மற்றும் உளவியல் ரீதியான, வாழ்வியல் மற்றும் சமூக ரீதியான காரணங்கள் உண்டு என்பது கூட அறியாதது போல் பேசுவது வருத்தமளிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் கட்டமைப்பை பற்றி போகிற போக்கில் பேசுவது மிகவும் அபத்தமானதாகும்.

ஒரு பெண்ணின் அனுமதியின்றி காமாதகன் ஒருவன் தனது இச்சையை தீர்ப்பதற்காக கட்டாய உறவு கொள்வதன் மூலம் கற்பை அழிக்க முடியாது. அதனால், "பெண் ஒருத்தி கற்பழிப்பு" - என்ற தலைப்பு செய்தி நிச்சயமாக அர்த்தமற்றது! ஆனால், ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ தன் இச்சையை தணிப்பதற்கு சுயகட்டுப்பாடின்றி கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்ளும் செயலில், கற்பிழப்பு என்ற பேச்சுக்கு கட்டாயம் இடமுண்டு. அதேபோல், ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதிலும் விதிவிலக்கு உண்டு. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சரியான புரிதலின்றி மனம் புரிந்து பின் மன வேறுபாடு காரணமாக பிரிய நேரிடின், அவ்விருவரும் வேறு இருவரை திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. அது "ஒருத்தனக்கு ஒருத்தி" என்ற வாழ்வியல் கட்டமைப்பிற்கு எதிரான செயலும் அல்ல. கமல்ஹாசன் அவர்களும் மேற்கூறிய காரணத்திற்காகத்தான் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார் எனின் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவ்வாறின்றி, பாலியல் பரிசோதனை தான் காரணம் எனின், அது மிகவும் வருத்தத்திற்குரியது.

விரிவான பார்வை, அதிகபட்ச நேசம், அலைவரிசை ஒத்துபோதல் என புகழ்தல் ஒரு புறம், மெய்ப்பித்தல் என்னும் சுவடு அறவேயன்றி ஒருவனின் கலை உருவாக்கத்தையும், கற்பனைக்கு அப்பாற்பட்ட முயற்சியையும் ஒரு பத்தாம் தரமான உருவாக்கத்தோடு பொத்தாம் பொதுவாக ஒப்பிடுவது ஒரு புறம், என காணப்படும் இவரது எழுத்து, முரண்பாடுகளின் சரமே.

கேயாஸ் தியரி பற்றி சிந்திப்பதற்கு பல கமல்ஹாசன்களும் பல சாரு நிவேதிதாக்களும் தமிழ் நாட்டில் நிச்சயம் இருக்கக்கூடும். இங்கே சிந்தனையின் அடுத்த படியான உருவாக்கத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கேயாஸ் தியரி பற்றி எழுதியவர்க்கு, படத்தின் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காட்சிகளையும், கடைசிக்கட்ட காட்சிகளையும் கொண்டு கேயாஸ் தியரியான பட்டர்பிளை எபெக்டை கமல் விளக்குவதை ஏன் இவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

சர்கஸ், பாம்பு டைப்படிப்பது போன்ற காட்சி அமைப்புகளுடன் ஒரு கலைஞனின் பத்து வேடம் போடும் முயற்சியை ஒப்பிடுவது எவ்வாறு நியாயமாகும்? ஒப்பனையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு பதில், ஒப்பனை போடுவதையே குறை கூறும் இவரது கருத்திலுள்ள வேகம், கடிவாளம் போட்ட ஒரு குதிரையின் வேகமே தவிர, ஒரு ஓட்டப்பந்தய வீரனின் வேகமல்ல! பத்து வேடமிடுவது எவ்வாறு இலக்கியத்திற்கு எதிரான செயலாகும்? ஒரு நடிகன் இத்தனை வேடம் தான் போட வேண்டும் என்ற இலக்கிய நியதியில் நம்பகதன்மையோ, தர்க ரீதியோ சற்றும் இருப்பதாக தெரியவில்லை!

எனது இந்த பகுதியின் முதல் பத்தியில், ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களின் ஒப்பீட்டு உவமானத்தை சொன்னதன் காரணம், ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு முன் வந்த திருவிளையாடலின் தொழில்நுட்பத்தையும் தசாவதாரத்தின் தொழில்நுட்பத்தையும் ஒப்பிடுவதிலுள்ள அவரின் கருத்திலுள்ள பரிமாணத்தின் எண்ணிக்கை ஒன்றை விட அதிகமாக இல்லாததே. ஒருவரது ஒற்றை பரிமாண கருத்துக்கள், ஒரு பொருள் அல்லது ஒரு செயலின் பலவாறான தன்மைகளையும் அதன் மீது காலம் ஏற்படுத்தும் பரிணாமத் தாக்கத்தையும் மறந்து விடும் ஆபத்துமிக்கது. அவரின் அந்த கால மற்றும் இந்த கால படங்களின் ஒற்றை பரிமாண ஒப்பீடும் அவ்வாறே!

இங்கே பன்னிரெண்டாம் நூற்றாண்டு காட்சிகள் பற்றிய அவது கணிப்பிற்கும், குலோத்துங்க சோழன் மற்றும் அக்கால வைணவர்களின் உடர்கட்டமைப்பை பற்றிய அவரது விமர்சனத்திற்கும் எதிரான மாற்று கருத்தொன்றுமில்லை. அனால் திரைகதையில் உள்ள தொய்வை பற்றி தெளிவாக குறிப்பிடாமல், படிக்கும் வாசகனை முட்டாளாக்கும் விதமாக, கதையை நகர்த்த உதவும் படத்தொகுப்பின் உத்திகளில் ஒன்றான jump-cut ஐ கமல் ஏதோ மாபெரும் தவறான முறையில் முட்டாள்த் தனமாக பயன்படுத்தி உள்ளது போல் சித்தரித்திருப்பதை என்னவென்பது? கமலின் narcissism எல்லாம் மனோதத்துவ நிபுணர் ஒருவரின் துணையுடன் இன்னும் விளக்கமாக அலசப்பட வேண்டிய விஷயம்!

கலிபுல்லாவாக வரும் ஏழு அடி கமல் கோமாளித்தனமாக இருந்தது உண்மைதான். ஆனால், கமல் குள்ளமாக நடித்து முடித்து விட்டதால் மட்டுமே இந்த படத்தில் உயரமாக நடித்தார் என்ற அவரது கருதுகோள் எல்லாம் புள்ளியியல் விவரத்துடன் கூடத்தில் நிருபிக்க வேண்டிய ஒன்று. ருக்குமணி பாட்டி பற்றிய அவரது கருத்தும் வெற்று விதண்டாவாதமே.

பூவராகனாக வரும் பாத்திர சித்தரிப்பில் அவர் கண்டுள்ள குறை மிகவும் நகைப்பிற்குரியது. அவரது வனப்பிலோ, வடிவிலோ என்ன குறை கண்டார்? நல்ல திடமாவும், நேர்த்தியான உடையுடனும், குறையில்லாத முகவாட்டத்துடனும் காணும் பூவராகனின் பாத்திர சித்தரிப்பில் இவர் கண்டுள்ள விகாரத்தன்மை விந்தையானது. சரும நிறத்தின் கருமை மட்டுமே பூவராகவன் தோற்றம் பற்றி விகாரமாக தோன்றும் அவரது மனப்பாங்கிற்கு காரணமாக இருக்க முடியுமெனில், அவரது நிறவேற்றுமைக் குணத்தையல்லவா அது வெளிப்படுத்துகிறது? இதே பூவராகவன் சற்றே வெண்ணிறத் தோலுடன் படைக்கபட்டிருப்பின், பாத்திர முரண்பாட்டை பற்றி பக்கம் பக்கமாக அல்லவா எழுதியிருப்பார் இந்த சாரு நிவேதிதா.

தலித் தலைவன் பூவராகவன் உயிர் விடும் காரணம், ஒரு திரைப்படதிலுள்ள சிறிய காட்சியமைப்பே. ஒரு பாத்திரத்திற்கு ஏற்படும் முடிவை ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த கருத்தாக தருவிப்பது ஒரு வித புறச்செருகலே. அதே போல ஊர்ப்பாட்டியின் குடும்ப கட்டுப்பாடு நாடகங்கள் பற்றி பேசும் அளவிற்கு கிராமங்களுக்கு வெளிப்பாடு கொண்ட இவருக்கு இறந்தவரருகே ஒப்பாரி பாடும் பழக்கம் பற்றி ஏன் தெரியவில்லை? இது அவரது மறதி நோயின் வினோத குணம் கூட காரணமாக இருக்கலாம். இல்லையெனில் கபிலன் கண்ணீர் அஞ்சலியாக செலுத்தும் கவிதையை நையாண்டி செய்திருக்க மாட்டார். இவ்வித மறதி நோயின் வினோத குணம் அறிவது எவருக்கு ஆயினும் சற்று சிரமமே. சந்தான பாரதி நடித்த படங்களில், மும்பை எக்ஸ்பிரஸ்ஸோ, மைகேல் மதன காம ராஜனோ, பஞ்சதந்திரமோ நினைவுக்கு வராமல் கரகாட்டகாரன் படம் மட்டும் நினைவுக்கு வந்ததும் மேற்சொன்ன மறதி நோய் கொண்ட ஒருவரின் கருத்துப் புறச்செருகலே.

முஸ்லீம்களை சித்தரித்த விதத்தில் உள்ள முழுமையின்மையை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், கமலின் ஹிந்துத்வா பார்வை பற்றிய அவரது பார்வைக்கு கருத்துக் கூறும் அளவிற்கு எனக்கு ஞானமில்லை. பஞ்சாப் பாடகர் பாத்திரம் பற்றிய அவரது கருத்தும் உண்மையே. ஆனால், பஞ்சாப் பாடகரின் nasal தன்மையை ஆராயும் நுட்பம் கொண்ட சாரு நிவேதிதா, பல்ராம் நாயுடு பழைய தெலுங்கு பாடலிற்கு இடுப்பை அசைக்கும் நுட்பத்தை சொல்லத் தவறியதன் உள்நோக்கம் என்னவோ? நூறு வேடத்தில் நடிப்பதெல்லாம் பெரிதில்லை; முகமூடி இருந்தாலே பின் லாடன் ஆகிவிடலாம் என்றெல்லாம் பேசுவது சிறுபிள்ளைத்தனமானதும், தான்தோன்றித்தனமானதுமான செயலே.

கமலின் "வெள்ளைக்காரனுக்கு பரிசு கொடுக்கும் நிலை வர வேண்டும்" என்கின்ற கனவை, தமிழ்நாட்டிலுள்ள philistine கலாசாரம் பற்றிய தன் அறிவுஜீவி தனமான பேச்சு கொண்டு அழிக்க நினைப்பது, ஒருவன் நற்ற நாற்றை வளர்வதற்கு முன்னே களை எனச் சொல்லி அறுத்தெறிவது போன்றதாகும். பாரதி போன்றோரின் சமுதாய முன்னேற்ற கனவுகளை அக்காலத்திலிருந்த சமுதாய பின்னடைவுகளை சுட்டிக்காட்டி மட்டம் தட்டியிருக்க கூடுவோரின் மட்டகரமான செயலை போன்றது இவரது பேச்சு. பின்னடைவுகள் இருப்பதால் மட்டுமே முன்னேற்றம் பற்றிய கனவுகள் காற்றில் மிதக்கிறது என்ற அடிப்படை உண்மையை கூட அறியாத இவரெல்லாம் எழுதுவதையே நிறுத்துவது நல்லது.

கமல், ரஜினி, ஜெயலலிதா போன்றோர் பற்றிய இவரது அனுமானங்களும் கேள்விக்கூரியதே. "காலாவதியாகிவிட்டது" வார்த்தையின் சாரு நிவேதிதாவின் இரண்டாவது பயன்பாடும் எரிச்சலே ஊட்டுகிறது. ஆத்திக, நாத்திக விவாதமெல்லாம் காலவதியாகிவிட்டது என்று சம நிலை உள்ள எந்த எழுத்தாளனும் சொல்லக் கூடிய கூற்று அல்ல. ஒவ்வொருவர் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலப் பயணத்தில் ஏற்படும் மனப் போராட்டங்களின் முடிவிலா தொடர்ச்சியே ஆத்திக நாத்திக விவாதங்கள். அதனை பற்றிய விவாதமும் சமகாலத்தை சார்ந்ததே.

நேற்று வந்த வசந்த பலன், சிம்பு தேவன், கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் போன்றோருடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு கமலின் தரம் ஒன்றும் குறைந்து விடவில்லை. விதை போட்டதோடு மட்டும் நிறுத்திவிடாமல், தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு, கனிகள் வரும் வரை நிழலாய் பார்த்து பாடுபட்ட ஒரு தோட்டக்காரனை, அதிலிருந்து விழுந்த கனிகளை பொறுக்கி சந்தையில் விற்கும் வியாபாரிகளோடு ஒப்பிடும் மனப் போக்கை என்னவென்பது? செல்வராகவன் மற்றும் அமீரின் திறமைக்கு எதிராக சொல்கிற கூற்று அல்ல இது; கமலுக்கு எதிராக சாரு நிவேதிதா சொன்ன கருத்துக்கெதிரான கூற்றே இது.

மற்றபடி "Babel" மற்றும் "Amores Perros" போன்ற படங்களின் மேற்கோள்கள் சாரு நிவேதிதா தனக்கு தெரிந்த சில விசயங்களை கொண்டு வாசகனை நியாயமற்ற முறையில் ஆட்கொள்ளும் நெம்புநயமே. இத்தகையதான இந்த சாரு நிவேதிதாவின் எழுத்து, நியாயமின்மை, சூழ்ச்சித்திறன், கபடதாரித்தனம், புறச்செறுகல், தர்க்க ரீதியின்மை மற்றும் முரண்பாடுகளின் தொகுப்பே தவிர ஒரு விமரிசனமே அல்ல.

இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் விஷயத்தை தெரிந்து கொள்வதில் உள்ள எளிமையையும், அதே சமயத்தில் அந்த விஷயத்தை பற்றிய தெளிவான, ஆழமான, நியாயமான, சுயநலம் அற்ற, கபடதாரித்தனம் அற்ற பார்வையின் அருமையையும் அறியாது போன்று, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் எழுதுவது மிகவும் வேதனை தரும் விஷயமே!

1 Comments:

  • குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் எழுதப்பட விமர்சனம்...படித்தவர்களுக்கு புரியும்

    By Anonymous tamil ma, At March 13, 2010 at 4:15 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]Links to this post:

Create a Link

<< Home